கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் ஏழை மக்கள், வெளிமாநில தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு அவர்களுக்கு உதவும் நோக்கில் 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இம்மாதிரியான தங்களின் கோரிக்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் Speak up India என்ற பெயரில், காங்கிரஸ் சமூக வலைதளங்களில் பரப்புரை செய்துவருகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்ட வீடியோவில், "கரோனா வைரஸ் நோயின் தாக்கம் காரணமாக நாடு நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இருப்பினும், மக்களின் அழுகுரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.
கஜானாவை திறந்து ஏழை மக்களுக்கு உதவ வேண்டும். அனைவரின் வங்கி கணக்குகளிலும் மாதத்திற்கு 7,500 ரூபாய் என அடுத்த ஆறு மாதத்திற்கு வழங்க வேண்டும். உடனடியாக 10,000 ரூபாய் வழங்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு இலவசமாகவும் பாதுகாப்பாகவும் செல்வதை உறுதி செய்ய வேண்டும். வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் பணி காலத்தை 200 நாள்களாக உயர்த்த வேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் தந்து கோடிக்கணக்கான வேலைகளை பாதுகாக்கும் வகையில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: பயணிகள் விமானத்தை சரக்கு விமானமாக மாற்றும் ஸ்பைஸ்ஜெட்