மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், சண்டே சம்வாத் நிகழ்ச்சியில் சமூக வலைதளம் மூலம் கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலளித்தார்.
அப்போது கரோனா தொடர்பாக கேட்கப்பட்ட பல கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "வரவிருக்கும் திருவிழாக் காலங்களில், மக்கள் வெளியே செல்லாமல், வீட்டிலேயே கொண்டாடி, கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும்.
கரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க, அடுத்த இரண்டு மாதங்களுக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்த மக்கள் இயக்க பரபரப்புரையில் மக்கள் இணைய வேண்டும்.
கரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இரண்டாயிரம் நோயாளிகளுக்கு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், முடிவுகள் 98 விழுக்காடு துல்லியமாக இருந்தது.
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கிய இந்தப் பெலுடா பரிசோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர், பெங்களூரில் உள்ள அணுசக்தி துறையின் உயிரியல் தேசிய மையம் ஆகியவை ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
கரோனா ஒழிப்புப் பணிக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு முதல் கட்டமாக ரூ.3,000 கோடி வழங்கப்பட்டது. இதில், மூன்று மாநிலங்கள் தவிர, பிற மாநிலங்கள் இந்த நிதியை முழுவதுமாகப் பயன்படுத்திவிட்டன. கரோனா சிகிச்சையில் ஆயுர்வேத மருத்துவ முறைகளின் தாக்கம் குறித்து ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன.
பெலுடா பரிசோதனை என்பது, கருத்தரிப்பை எளிதில் கண்டறியும் பரிசோதனையைப் போன்றது. காகிதத்தின் அடிப்படையிலான, செலவு குறைந்த ஒரு தொழில்நுட்பம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பெலுடா என்ற உபகரணத் தொகுப்பில், வைரஸ் கண்டறியப்பட்டால் அது தனது நிறத்தை மாற்றிக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் ஒரு மணி நேரத்திற்குள் வைரஸ் பாதிப்பு உள்ளதா இல்லையா? என்பதை கண்டறிய முடியும்" எனத் தெரிவித்தார்.
இந்தப் பரிசோதனைக்கு ரூ.500 மட்டுமே செலவாகும் என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், இந்தியாவில் மேலும் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.