டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே குளிர் காலங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள முதியவர்களும் குழந்தைகளும் மூச்சுவிடக் கூட கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டும் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இன்று (நவ.19) காலை டெல்லியல் காற்றின் தர மதிப்பீடு 272ஆக உள்ளது. புதன்கிழமை (நவ.18) சராசரியாக டெல்லியில் காற்றின் தர மதிப்பீடு 211ஆகப் பதிவாகியுள்ளது.
காற்றின் தர மதிப்ப்டு 0 முதல் 50க்குள் இருந்தால் காற்றின் தரம் 'நன்றாக' உள்ளது என்று பொருள். அதேபோல காற்றின் தரம் 51 முதல் 100 வரை இருந்தால் 'திருப்தி' என்றும், 101 முதல் 200 வரை இருந்தால் 'மிதமானது' என்றும் அர்த்தம்.
அதேநேரம் காற்றின் தரம் 201 முதல் 300 இருந்தால் 'மோசம்' என்றும், 301 முதல் 400 வரை இருந்தால் 'மிகவும் மோசம்' என்றும் பொருளாகும். 401 முதல் 500 வரை காற்றின் தரம் இருந்தால் அது மிக மிக மோசமான நிலையாகக் கருதப்படுகிறது.
அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவது டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது காற்று வடமேற்கு திசை நோக்கி வீசத் தொடங்கியுள்ளதால், விவசாயக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை அதிக அளவில் டெல்லியை நோக்கி வருவதே இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
மேலும், டெல்லியில் வெப்பத்தின் அளவும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் காற்றில் உள்ள மாசுத் துகள்களின் நகர்வு தடைப்பட்டு, அவை ஒரே இடத்தில் இருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனாலும் காற்று மாசு அதிகரிப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மாஸ்க் அணியாவிட்டால் இவ்வளவு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமா?