தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுநிலை புயலாக உருவெடுத்துள்ளது. நிசார்கா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், மகாராஷ்டிர மாநிலத்தில் கரையைக் கடக்க தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் வலுவான புயலாக நிசார்கா உருவெடுத்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படைகளின் 30 குழுக்கள் மகாராஷ்டிராவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் புயல் கரையைக் கடக்கும்போது சுமார் 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிராவின் இரண்டு கடலோர மாவட்டங்களான ராய்காட், ரத்தினகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 15 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
செய்ய வேண்டியவை
- அத்தியாவசியம் இல்லாத உபகரணங்களுக்குச் செல்லும் மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டும்.
- தூய்மையான இடத்தில் தண்ணீரைச் சேகரிக்க வேண்டும்.
- காயம் அடைந்த மக்களுக்கு முதல் உதவி அளிக்க வேண்டும்.
- வாயு கசிவு ஏற்பட்டிருந்தால் ஜன்னல்களை உடனடியாக திறந்து அந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டும். முடிந்தால், கேஸ் சிலிண்டரை ஆப் செய்துவிட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கசிவு குறித்து தெரிவிக்க வேண்டும்.
- மின்சார உபகரணங்கள் சேதமடைந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தீப்பொறிகளை எங்கேனும் கண்டால், மின்சாரத்தை உடனடியாக துண்டித்து எலக்ட்ரீஷியனை தொடர்பு கொள்ள வேண்டும்.
- குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், வயது வந்தோர், அண்டை வீட்டார் ஆகியோருக்கு உதவி செய்ய வேண்டும்
செய்யக் கூடாதவை
- வதந்திகளை நம்பி அதனை பரப்ப வேண்டாம்.
- புயல் கரையைக் கடக்கும் போது வாகனங்களை இயக்க வேண்டாம்.
- சேதமடைந்த கட்டடங்களிலிருந்து தள்ளி நிற்க வேண்டும்.
- பாதுகாப்பை உறுதி செய்யாதவரை காயமடைந்தவர்களை இடமாற்றம் செய்ய வேண்டாம். அது அவர்களை மேலும் காயப்படுத்தும்.
- எளிதில் தீப்பற்ற வைக்க கூடிய எண்ணெய் பொருள்களை கீழே சிந்த வேண்டாம். அதனை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும்.
மேலும், உதவிக்கு 1916 என்ற அவசர எண்ணை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பறிபோன இரு உயிர்கள் - கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப் பழத்தில் வெடியை வைத்து வழங்கிய மிருகங்கள்