கேரள மாநிலத்தில் 14 மாவட்டங்களில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அங்குள்ள 6 மாநகராட்சிகள், 86 நகராட்சிகள், 152 ஊராட்சி ஒன்றியங்கள், 941 கிராம பஞ்சாயத்துகள் ஆகியவற்றில் பதிவான வாக்குகள் டிச.17ஆம் தேதியன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மாநிலத்தை ஆளும் கட்சியான சிபிஎம் தலைமையிலான இடதுசாரி முன்னணியானது (எல்.டி.எஃப்) 4 மாநகராட்சிகள், 38 நகராட்சிகள், 11 மாவட்ட ஊராட்சிகள், 93 ஊராட்சி ஒன்றியங்கள், 403 கிராம பஞ்சாயத்துகளில் பிரமாண்ட வெற்றிப்பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இரண்டாம் இடத்தையும், பாஜக மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் மிகவும் சுவாரஸ்யத்தை உண்டாக்கும் வகையில், பாலக்காடு நகராட்சி தேர்தலில் வெற்றியை பாஜக உறுதிசெய்திருந்தது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், பாலக்காடு நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே என்.டி.ஏ கூட்டணியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர். இதனைத் தொடர்ந்து வகுப்புவாத வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக முழக்கமிட்ட அவர்கள், அனுமதியின்றி பாலக்காடு நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அதுமட்டுமில்லாது, நகராட்சி கட்டடத்தின் உச்சிக்கு சென்று 'ஜெய் ஸ்ரீ ராம்' என பொறிக்கப்பட்ட பெரிய பதாகை ஒன்றையும் வைத்தனர்.
அரசியலமைப்புக்கும், நாட்டின் மதச்சார்பின்மைக்கு விரோதமாக இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்ட என்.டி.ஏ கூட்டணி கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஎம் கட்சியின் பாலக்காடு நகராட்சி செயலாளர் டி.கே.நவுஷத் மற்றும் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் வி.கே. ஸ்ரீகண்டன் ஆகியோர் தெற்கு பாலக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இதன் அடிப்படையில், பாஜக மாநில பொதுச் செயலாளர் சி.கிருஷ்ணகுமார், பாஜக வேட்பாளர்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 153 ஆவது பிரிவின் கீழ் பாலக்காடு தெற்கு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிறப்புப் பிரிவு காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜகவினரின் இந்த செயலுக்கு அம்மாநில சிபிஎம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க : ஆந்திராவில் பரவும் புதிய நோய்க்கு காரணம் என்ன? - நிபுணர்கள் விளக்கம்