கேரள மாநில அரசுக்கும் அம்மாநில ஆளுநர் ஆரீப் முகமது கானுக்கும் இடையே வார்த்தை மோதல் உச்சமடைந்துவருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இதுதொடர்பாக மாநில ஆளுநரிடம், பினராயி விஜயன் அரசு எவ்வித முன்அனுமதியும் கோரவில்லை. இது குறித்து ஆளுநருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு உச்சம் பெற்றது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் ஆரீப் முகமது கான், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. எனினும், அரசியலமைப்புச் சட்டத்தை மாநில அரசும் முதலமைச்சரும் மீறக்கூடாது” என அறிவுறுத்தினார். ஆளுநரின் இந்தப் பேட்டி கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் விதமாக, கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தேசாபிமானியில் தலையங்கம் ஒன்று வெளியாகியுள்ளது.
'ஆளுநரின் அரசியல் விளையாட்டு' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தத் தலையங்கத்தில், “அரசியலமைப்புக்குட்பட்டு ஆளுநர் தனிநபர் விருப்புவெறுப்பின்றி செயல்பட வேண்டும். ஆளுநரின் அரசியல் வார்த்தைகளும் கடின மொழிகளும் நாட்டை அச்சுறுத்துகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. ஆனால் அரசுக்கென்று சுயஅதிகாரம் இல்லை. மாநில அரசு ஆளுநரை சார்ந்திருக்க வேண்டும் என்பதை நிறுவுவதற்கே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநில அரசின் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு தனது ஒவ்வொரு முடிவையும் ஆளுநருக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாயமில்லை. இது அரசியலமைப்பின் 167ஆவது பிரிவு தெளிவாக கூறுகிறது. மேலும் மாநில அமைச்சரவையின் முடிவுகளை நிறைவேற்றும் கடமை முதலமைச்சருக்கு உண்டு. குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சட்ட நடவடிக்கை கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னர் ஆளுநருக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயமில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சி.ஏ.ஏ.வை எதிர்த்தாலும் சட்டத்தை மீறக் கூடாது' - பினராயி விஜயனுக்கு ஆளுநர் அறிவுரை