டெல்லியில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களிடம் பிளாஸ்மாவை தானமாக பெற இன்ஸ்டியூட் ஆப் லிவர் & பிலியரி சயின்ஸ், பிளாஸ்மா வங்கியாக மாற்றப்பட்டது. இதனை ஜூலை 2ஆம் தேதி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். இது தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பிளாஸ்மா வங்கியின் பொறுப்பாளர் மருத்துவர். அனிதா, இந்த வங்கியின் வேலை, டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் பிளாஸ்மா விநியோகம் செய்வது. பிளாஸ்மா தேவையான மருத்துவமனைகளில் இருந்து அழைப்பு வரும், பிளாஸ்மா விநியோகிக்க முடியும் அல்லது இல்லை என தெரிவிப்பேன். முன்பு இதற்கான வசதிகள் இல்லை. தற்போது வங்கி செயல்படத் தொடங்கியுள்ளது என்கிறார்.
மேலும் அவர், ஒரு பிளாஸ்மாவை தானமாக அளிக்க, அவருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டு பின் அதிலிருந்து மீண்டு 14 நாட்கள் ஆக வேண்டும். பிளாஸ்மா தானமளிப்பவரின் ரத்த மாதிரி எடுக்கப்படும். பின்னர் ரத்த அழுத்தம் மற்றும் உடலின் வெப்பநிலை சோதிக்கப்படும். தானமளிப்பவர் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும், சோதனைகள் அவர் தானமளிக்க ஏற்றவர் என வந்தால், அதன்பிறகு மற்ற பணிகள் தொடங்கும். பிளாஸ்மா தானமளிக்க பின்பற்றப்படும் வழிமுறைகள் முடிய ஒன்றரை மணி நேரம் ஆகும். பிளாஸ்மா எடுக்கும் மெசினில் அரை மணி நேர வேலைதான். ஒரு நபர் 500 மிலி பிளாஸ்மா தானம் செய்ய முடியும். இதை 2 நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். பிளாஸ்மாவை ஒரு வருடம்வரை பராமரிக்க முடியும் என தெரிவித்தார்.
இதுகுறித்து பிளாஸ்மா தானமளித்த ரோகன் என்பவர் கூறுகையில், கரோனாவுக்கு எதிரான போரில் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்கு எனது குடும்பத்தாரும் ஆதரவாக இருக்கின்றனர் என்கிறார்.
நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை டெல்லி முதலமைச்சர் ஜூலை 2ஆம் தேதி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்துவைத்து, மக்களை பிளாஸ்மா தானமளிக்க முன்வருமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர், பிளாஸ்மா தானமளிக்க விரும்புபவர்கள் 1031 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது 8800007722 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யலாம். மருத்துவர்கள் நீங்கள் பிளாஸ்மா தானம் செய்ய தகுதியுடையவரா என்பதை உறுதி செய்வார்கள் என்றார்.