நாடு முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த அபாயம் தற்போது பரவிவருகிறது. இந்தியாவில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 43ஆக உயர்ந்துள்ள நிலையில், முக்கியப் பண்டிகையான ஹோலி கொண்டாட்டத்தைப் பலரும் தவிர்த்துவருகின்றனர்.
இதில் அதிர்ச்சியூட்டும்விதமாக கொரோனா பீதி காரணமாக புனேயில் உள்ள மருந்தகத்திலிருந்து முகமூடி, மருந்துப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன. புனேவுக்கு அருகேயுள்ள கோரேகான் பகுதியில் மருந்தகம் ஒன்றிலிருந்து சுமார் 35 ஆயிரம் மதிப்பிலான முகமுடி, ஊசி, மாத்திரை உள்ளிட்ட மருத்துவப் பொருள்களை 28 வயது மதிக்கத்தக்த நபர் திருடியுள்ளார். அவரைக் கைதுசெய்த காவல் துறை அவரிடமிருந்து மருந்துப் பொருள்களைப் பறிமுதல்செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், அங்கு இந்நோய் குறித்த வதந்திகள் தீவிரமாகப் பரப்பப்படுகிறது. அங்கு மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவிற்கு தேக்குவதற்காக பதுக்கலுக்கு எதிரான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. மேலும், இந்நோய் குறித்து மாநில மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா பீதி: காஷ்மீரின் லே மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை