புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், “அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் கரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நமது அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கடலூர் அதிக அளவில் வைரஸ் தொற்றுடன் உள்ளது. இதனால் நமது மாநில மக்களை காப்பது கடமை. இந்த வைரஸ் தொற்று எவ்வாறு வருகிறது? எப்படி வருகிறது? என்று தெரியவில்லை. இப்போது நாம் கரோனா தொற்றின் இரண்டாவது நிலையில் இருக்கின்றோம். இது மூன்றாவது கட்டமாக மாறினால், அது சமூகப் பரவலாக மாறும். இது பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
புதுச்சேரியில் தற்போது பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்கள். இருந்தபோதும் மாலையில் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே நடமாடுகின்றனர். அதனால், சகஜ நிலைக்கு நாம் மாறினால் கூட மக்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளக்கூடிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடும்பத்துடன் இருக்க வேண்டும். வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். விழாக்கள் தவிர்க்கப்படவேண்டும். இது இன்னும் ஓராண்டுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக மாநிலம் தயார் நிலையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...கரோனா: அதிக பாதிப்புக்குள்ளான ஐந்து மாநிலங்கள்