மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருந்தாலும் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் அக்கட்சியின் கூட்டணி பெரும் வெற்றிபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களில் வென்றது. இதனையடுத்து இரு கட்சிகளிடையே சில மாற்றுக் கருத்துகள் உருவாக ஆரம்பித்தன. திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என். நேரு, உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து களமிறங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பின்னர் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் காரத்தே தியாகராஜன், உள்ளாட்சித் தேர்தலில் 50 விழுக்காடு இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்க வேண்டும் என கருத்து வெளியிட்டார். இது இரு கட்சிகளுக்கு இடையே சிறு உரசலை உண்டாக்கியது. இந்நிலையில், கூட்டணிக்குள் உண்டான உரசலை சரி செய்ய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, ஒழுங்கு நடவடிக்கை குழுவை, அக்கட்சியின் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் உருவாக்கியது.
இதனையடுத்து தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் காரத்தே தியாகராஜன், கட்சிக்கு எதிராகவும், ஒழுங்கீனமாகவும் செயல்பட்டதாகக் கூறி அவரை இடைநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவு பிறப்பித்தது.