நாகாலாந்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் பாதுகாப்பு சூழலை ஆய்வு மேற்கொள்ளும் வகையில் ராணுவ தளபதி நரவனே மூன்று நாள் பயணமாக நாகாலாந்து சென்றுள்ளார். ஈஸ்டர்ன் கமெண்ட் ராணுவ தலைமை அலுவலர் லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுகான், லெப்டினென்ட் ஜெனரல் ஆர்.பி. கலிதா ஆகியோர் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நரவனேக்கு எடுத்துரைத்தனர்.
நாகாலாந்து அமைதி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் நரவனேவிடம் எடுத்துரைக்கப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் உள்ள ராணுவ தலைமையகத்தில் ராணுவ தளபதி ஆய்வு மேற்கொண்டார்.
மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையில் அனைத்து விதமான ஆதரவும் அளிக்கப்படும் என நரவனே நாகாலாந்து ஆளுநர், முதலமைச்சர் ஆகியோருக்கு உறுதி அளித்துள்ளார். இந்திய, மியான்மர் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.