பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்பட பல எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்தன.
வங்கதேசத்திலிருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களின் வருகையால் பூர்வகுடி மக்களின் உரிமை பறிக்கப்படும் என கருத்து வலுத்துவந்தது.
மக்களவையில் ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவானது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. மக்களவையின் பதவிக்காலம் முடிவடைந்ததால், மசோதா காலாவதியானது. இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவை குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், டிசம்பர் 9ஆம் தேதி குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
முன்னதாக, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: கனவுலகில் வாழும் மோடி, அமித் ஷா! - ராகுல் தாக்கு