டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்புப் படை நடத்திய மூன்று சோதனைகளில் கடந்த இரு நாள்களில் மட்டும் ரூபாய் 1.34 கோடி மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவரும் இரு இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலர் கூறுகையில், 'இரு வெளிநாட்டு பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடமிருந்து 31 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 22 லட்சம்) கைப்பற்றப்பட்டது.
அதேபோல, பாங்காக்கிலிருந்து வந்த சுரேந்தர் சிங் என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவரிடமிருந்து ரூபாய் 96 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப்பட்டது. மூன்றாவதாக நேற்று நடைபெற்ற சோதனையில், ரூ. 16 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப்பட்டு சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிஐஎஸ்எஃப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: '10 விழுக்காடு வளர்ச்சிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை' - அடித்துச் சொல்லுகிறார் டி.ஆர். பாலு