கடந்த ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில், இந்திய, சீன எல்லைப் பகுதியான லடாக்கில் அமைந்துள்ள பாங்கோங் சோ ஏரி அருகே சீன ராணுவம் நிலைபெற்ற பகுதியிலிருந்து முன்னேறிச் செல்ல முயற்சித்ததாகவும், ஆனால் இந்திய ராணுவம் அதனை தடுத்து நிறுத்தியதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. கல்வான் மோதலைத் தொடர்ந்து ஏற்பட்ட உடன்படிக்கையை சீன ராணுவம் மீறியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாங்கோங் சோ ஏரியின் தென் கரையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டதாகவும் இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்கும் வகையில் அது செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. கல்வான் மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வந்தது. இதனை குறைக்கும் நோக்கில் ராணுவ ரீதியாகவும், ராஜாங்க ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ராணுவம் திரும்ப பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இரு நாடுகள் உடன்படிக்கை மேற்கொண்டன. ஆனால், சீன ராணுவம் இதனை மீறியுள்ளதாக இந்திய அரசு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.
பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியை நிலைநாட்ட இந்திய ராணுவம் விரும்புகிறது. ஆனால், அதே சமயத்தில் எல்லையை பாதுகாக்க உறுதி பூண்டுள்ளது. சீன ராணுவத்தை தடுத்து நிறுத்தும் போது வன்முறை சம்பவம் நடைபெறவில்லை எனவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இருப்பினும், எல்லைப் பகுதியில் அத்துமீறவில்லை என சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.