டெல்லியில் உள்ள தீன் தயால் உபாத்யாய் (DDU) மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் பெண் ஒருவர், நோயாளி ஒருவருக்கு ஊசி போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இ்தனை நோயாளியுடன் வந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்வதைக் கண்டதும், ஊசி போடுவதை அந்த பெண் உடனே நிறுத்தியிருக்கிறார். வீடியோவைப் பதிவுசெய்த நபரிடம் இதுகுறித்து அவர் கேள்வியெழுப்பியதோடு, அவரிடம் புகைப்படம் எடுக்கவோ, வீடியோ பதிவு செய்யவோ கூடாது என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ மருத்துவமனையின் எலும்பியல் வார்டு எண் 4-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பதிவு செய்யும் நேரம் தெரியவில்லை. கவனக்குறைவு மற்றும் பணியில் செவிலியர் இல்லாததால் தவறு நடந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், பணியில் இல்லாத செவிலியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது நோயாளி பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்துள்ளதாகவும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஏ.கே. மேத்தா தெரிவித்துள்ளார். நோயாளி ஒருவருக்கு துப்புரவு பணியாளர் ஊசி போடும் நிகழ்வு பிற நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ப. சிதம்பரத்திற்கு வீட்டு உணவு வழங்க நீதிமன்றம் அனுமதி