ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து காணிக்கை செலுத்துவர். வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் இந்த கோயிலுக்கு பக்தர்கள் வருகைதருகின்றனர். இங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு தனி சிறப்புண்டு, அதற்காகவே பலரும் திருப்பதிக்கு வருகின்றனர். ஆண்டுதோறும் சுமார் 10 கோடி அளவுக்கு லட்டுகள் விற்கப்படுகிறது. கோயிலில் ஒரு லட்டு ரூ. 50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான இணையதளம் போல் போலி ஒன்றை உருவாக்கி அதில் ஆர்டர் செய்தால் வீட்டுகே திருப்பதி லட்டு பிரசாதம் வரும் என விளம்பரப்படுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து தேவஸ்தான நிர்வாகத்திற்குப் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தேவஸ்தான நிர்வாகிகள் போலி இணையதளங்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து Www.balajiprasadam.com என்ற போலி இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இணையதளத்தில் குறிப்பிட்டிருந்த தகவல்கள் அனைத்தும் போலியானவை என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக, 3 மாதங்களுக்குக் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் பக்தர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்று தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இதனைப் பயன்படுத்தி சிலர் திருப்பதி தேவஸ்தான இணையதளம் போல் சில மாற்றங்கள் செய்து வீடு தேடிவரும் திருப்பதி லட்டு பிரசாதம் என விளம்பரப்படுத்தியுள்ளனர்.
இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு, டிசம்பர் 7 ஆம் தேதி முதல் எங்கள் வலைத்தளத்தை நிறுத்திவிட்டோம். எங்களுக்கு ஆதரவளித்த மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், ஏதேனும் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது.