கர்நாடக மாநிலத்தில் 1999 - 2004ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தவர் எஸ்.எம். கிருஷ்ணா. இவரது மருமகன் வி.ஜி. சித்தார்த்தா. இவர் கஃபே காபி டே நிறுவனத்தை நடத்திவருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்றிரவு கர்நாடக மாநிலம் மங்களூருவிலிருந்து தனது கார் மூலம் உல்லா என்ற இடத்திற்கு தேசிய நெடுஞ்சாலை 66இல் சென்றுகொண்டிருந்தார். கார் மங்களூரு அருகேயுள்ள நேத்ராவதி ஆற்றை கடந்துகொண்டிருந்தபோது ஃபோன் பேசிக்கொண்டிருந்த சித்தார்த்தா திடீரென்று தனது ஓட்டுநரிடம் காரை நிறுத்தச் சொல்லியுள்ளார்.
அப்போது காரைவிட்டு இறங்கிச் சென்ற அவர், சுமார் ஒரு மணி நேரமாகியும் திரும்பாததால் பதற்றமடைந்த ஓட்டுநர் அவரது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, நேற்றிரவு முதல் சித்தார்த்தாவை தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
மேலும் அவர் நேத்ராவதி ஆற்றில் குதித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் படகினை கொண்டு ஆற்றிலும் தேடுதல் பணி நடந்துவருகிறது.