ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. துலு மகோடா மீது மிரட்டி பணம் பறித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இதற்கிடையில் பிப்ரவரி 19ஆம் தேதி, துலு மகோடா தலைமறைவானார்.
இந்த வழக்கு தொடர்பாக தன்பாத், பரோரா பகுதியில் அவரது வீட்டில் காவலர்கள் சோதனை நடத்தினர். எனினும் அவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிபதி சங்கீதாவின் வீட்டில் சரண் அடைந்தார்.
அவருக்கு நீதிபதி 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். பாஜக எம்.எல்.ஏ. மீது வியாபாரி இர்ஷாத் ஆலம் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் அளித்திருந்தார்.
பாஜக எம்.எல்.ஏ. மீது ஏற்கனவே பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். மேலும் இவர் மீது, காவலர்களை தாக்கி, குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவித்ததாக புகார் ஒன்றும் உள்ளது. இந்த வழக்கில் மகோடாவுக்கு தன்பாத் மாவட்ட நீதிமன்றம் 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது. பின்னர் அவருக்கு உயர் நீதிமன்றம் பிணை அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'செயல் திட்டம் இல்லை, தேர்தலில் மட்டுமே கவனம்'- விஜயனை வறுத்தெடுக்கும் காங்கிரஸ்