திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான குர்பான் கான் கடந்த இரு நாட்களுக்கு முன்னதாக மைசூரா திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த அனிஷூர் ரஹ்மான் மற்றும் அவரது உதவியாளர் முபார்க் கான் ஆகியோரை காவல் துறையினர் இன்று கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர்களை 13 நாட்கள் காவல் துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து கிழக்கு மிட்னாபூர் காவல் கண்காணிப்பாளர் சாலமன் பேசுகையில், தீபக் சக்கரபோர்த்தி என்பவரை கைது செய்து விசாரிக்கையில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் தெரியவந்தன.
அதையடுத்து ஒவ்வொரு நபராக கைது செய்தோம். இன்று பாஜகவைச் சேர்ந்த அனுஷூர் ரஹ்மான், அவரது உதவியாளர் முபாரக் கான் ஆகியோரைக் கைது செய்துள்ளோம்.
இந்த கொலை சம்பவத்தில் பாஜகவின் அனிஷூர் ரஹ்மானும், அவரது உதவியாளரும்தான் மூளையாக செயல்பட்டுள்ளனர். கொலை செய்தவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்றார்.
இதையும் படிங்க: கர்ப்பிணி, 8 வயது சிறுவன், கணவர் உட்பட மூவர் கொடூர கொலை - கேள்வி எழுப்பும் இணையவாசிகள்
!