டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க தாமதமாகுவதற்கு ஆம் ஆத்மி அரசுதான் காரணம் என குற்றஞ்சாட்டினார்.
மேலும் தேசிய தலைநகரில் 1984ஆம் ஆண்டு சீக்கியர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு காங்கிரஸ்தான் காரணம் என்றும் அவர் கூறினார். இதுதொடர்பாக பிரகாஷ் ஜவடேகர் மேலும் கூறியதாவது:-
டெல்லி அரசாங்க வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா வருகிற 22-ஆம் தேதி நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட முடியாது என்று கூறுகிறார். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் தூக்கிலிடப்பட வேண்டும் என்று முழு நாடும் விரும்புகிறது.
ஆனால் அவர்கள் அதை தாமதப்படுத்துகிறார்கள். மேல்முறையீடு செய்ய இன்னும் நேரம் இருக்கிறது என்கிறார். இந்த கூடுதல் நேரத்தை யார் கொடுத்தது? இது டெல்லி அரசாங்கத்தின் முரட்டுத்தனத்தை காட்டுகிறது.
டெல்லி அரசின் அலட்சியம் காரணமாகவே நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட தாமதமானது. இந்த தாமதத்திற்கு ஆம் ஆத்மி பொறுப்பேற்க வேண்டும்.
அவர்களின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் 2017 ல் தள்ளுபடி செய்தது. மேலும் மரணம் நிகழும் வரை தூக்கிலிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 1/2 ஆண்டுகளில் கருணை மனு தாக்கல் செய்ததற்காக குற்றவாளிகளுக்கு டெல்லி அரசு ஏன் நோட்டீஸ் கொடுக்கவில்லை?
இது ஆம் ஆத்மி அரசுக்கு கற்பழிப்பாளர்கள் மீது அனுதாபம் இருப்பதையே காட்டுகிறது. இதேபோல் காங்கிரஸ் அரசு 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது அனுதாபம் காட்டியது.
இந்த கலவரங்கள் குறித்து சரியான விசாரணை ஒருபோதும் நடக்கவில்லை. விசாரணை அறிக்கையும் இதனை தெளிவுப்படுத்துகிறது. சீக்கியர்களுக்கெதிரான வன்முறையின் போது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டன. மிருகத்தனமான சில விஷயங்களும் நடந்தன. ஆனால் இந்த விஷயங்களில் காங்கிரஸ் அரசாங்கம் மெத்தனப்போக்கை கடைப்பிடித்தது. இதுதொடர்பாக துரித விசாரணை மேற்கொள்ளவில்லை.
அவர்கள் இனப்படுகொலை குற்றவாளிகள். இந்த படுகொலையை நியாயப்படுத்தியவர் ராஜிவ் காந்தி. “பெரிய மரம் விழும் போது, பூமி அதிரத்தான் செய்யும்” என்று சீக்கியர்களுக்கு எதிரான படுகொலையை அவர் நியாயப்படுத்தினார்.
சீக்கிய எதிர்ப்பு இனப்படுகொலை செய்தவர்கள் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. ஏனெனில் அலுவலர்கள், காவல்துறையினர் விசாரணையில் அக்கறை காட்டவில்லை.
ஏன் முதல் தகவல் அறிக்கை கூட சரியான நேரத்தில் பதிவு செய்யப்படவில்லை. இந்தியாவிலேயே மிக மோசமான குற்றங்களை செய்தவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் என்ன நடந்தது? என கோருகின்றனர்.
காங்கிரஸின் சாம் பிராட்டோ செய்ததை நாடே அறியும். குற்றவாளிகளை பாதுகாக்கும் கட்சி காங்கிரஸ். இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
இதையும் படிங்க: சீக்கிய குருத்வாரா தாக்குதல்: சோனியா காந்தி கண்டனம்