ஹைதராபாத்: செப்டம்பர் 7ஆம் தேதி முதல் கரோனா தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட சோதனை தொடங்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் முக்கிய பங்கு வகிக்கும் மருத்துவர் வெங்கட ராவ், முதல்கட்ட சோதனை இறுதியை எட்டியுள்ள நிலையில், இரண்டாம் கட்ட சோதனையையும் தொடங்க முடிவு செய்துள்ளோம். கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் உடலில் எதிர்ப்பு சக்தி எந்த அளவு உயர்ந்துள்ளது என்பதை ஆய்வு செய்யப்போகிறோம் என்றார்.
இந்திய மருத்துவ கழகம் நாடு முழுவதுமாக மனிதர்கள் மேல் தடுப்பு மருந்து பரிசோதனை செய்ய 12 மருத்துவ நிலையங்களை தேர்வு செய்துள்ளது. அதில் மருத்துவர் வெங்கட ராவ் பணிபுரியும் சம் மருத்துவமனையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் கட்ட சோதனையில் பங்கேற்க பலரும் ஆர்வத்துடன் காத்திருப்பதாக வெங்கட ராவ் தெரிவித்துள்ளார்.