கடந்த மாதம், டிஆர்பி முறைகேடு தொடர்பாக, ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சிக் கவுன்சிலின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலர் பெர்த் தாஸ்குப்தா கைதுசெய்யப்பட்டார்.
பிணை கேட்டு அவர் மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். இந்நிலையில், டிஆர்பி முறைகேட்டில் முக்கியப் பங்கு வகித்துள்ளதாகக் கூறி அவரின் பிணை மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
ஜனவரி 4ஆம் தேதி, இது குறித்து உத்தரவை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சுதிர் பாஜிபாலே பிறப்பித்திருந்தார். இந்நிலையில், இன்று அது பொது வெளியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதிபதி வெளியிட்ட உத்தரவில், "கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின்படி, மேற்கூறப்படும் குற்றச்செயலில் அவர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மனு தாக்கல்செய்துள்ள தாஸ்குப்தா, டிஆர்பி முறைகேட்டில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு, ஜூன் மாதம் முதல் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பார்க் அமைப்பின் தலைமைச் செயல் அலுவலராக அவர் பொறுப்பு வகித்துள்ளார்.
தன்னுடைய பதவியைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சேனலுக்காக டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது விசாரணை அலுவலர் சேகரித்த ஆதாரங்களின்படி தெரியவருகிறது என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. தாஸ்குப்தாவை பிணையில் வெளியேவிட்டால் விசாரணையில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் நீதிபதி தெரிவித்தார்.