இதுதொடர்பான பார்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளில் (டிஆர்பி) மோசடி செய்த வழக்கில் நடந்துவரும் விசாரணையில் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் ஒத்துழைத்து வருகிறோம்.
தனியார் மற்றும் ரகசிய தகவல் தொடர்புகளை வெளிப்படுத்துவதன் மூலமும், அவற்றை தவறாகச் சித்திரிப்பதன் மூலமும் ரிப்பளிக் தொலைக்காட்சி நடவடிக்கைகளில் பார்க் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் விசாரணை குறித்து தாங்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. பார்க் இந்தியாவின் உரிமைகளுக்கு எந்தவித பாரபட்சமுமின்றி, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்துகிறது'' எனத் தெரிவித்துள்ளது.
விளம்பர வருவாயை அதிகரிப்பதற்காக டிஆர்பி புள்ளிகளை போலியாக அதிகரித்து மோசடி செய்ததாக ரிபப்ளிக் தொலைக்காட்சி உள்ளிட்ட நான்கு தொலைக்காட்சிகள் மீது மும்பை குற்றப்பிரிவு காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து பார்க் தலைமை செயல் அலுவலர் சுனில் லல்லா மற்றும் ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை செயல் அலுவலர் விகாஸ் கன்சந்தனி ஆகியோரின் இ-மெயில் உரையாடல்களை ரிபப்ளிக் தொலைக்காட்சி வெளியிட்டது. இதன்பின்னர் பார்க் நிறுவனத்தின் மேலே கூறப்பட்டுள்ள அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த இ-மெயிலில் ரிபப்ளிக் டிவி சிஈஓ காஞ்சந்தனி, பொதுதளத்தில் ரிபப்ளிக் தொலைக்காட்சி விதிகளை மீறவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த பார்க் இந்தியா, "பார்க் இந்தியாவின் விதிமுறைகள் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. ஏ.ஆர்.ஜி. மீடியாவுக்கு எதிராக ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் பார்க் உங்கள் பதிலுக்கு தேவையான ஆவணங்களுடன் உங்களுக்குத் தெரிவித்திருக்கும்" என்றது.
இந்த இரு இ-மெயில் உரையாடல்களை வைத்து பார்க்கையில், ரிபப்ளிக் தொலைக்காட்சி மீது எந்தவொரு குற்றச்சாட்டையும் பார்க் கூறவில்லை என்பது தெளிவாகிறது.
பார்க் அறிக்கை குறித்து ரிபப்ளிக் தொலைக்காட்சி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி கூறுகையில், ''மும்பை ஆணையர் பொய்கள் கூறிவருகிறார் என்பதை பார்க் அறிக்கை உறுதிபடுத்தியுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொடரும் கழிவு நீர் தொட்டி மரணங்கள்!