கரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பங்களா சாஹிப் குருத்வாரா உறுப்பினர்கள், மாநில நிர்வாகத்தின் உதவியுடன் தலைநகரின் சில பகுதிகளில் சமைத்த உணவை விநியோகித்து வருகின்றனர்.
இவர்கள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தினமும் உணவளித்து வருகின்றனர். உணவு தேவைப்படும் நபர்கள், தேவைப்படும் இடத்திலிருந்து அழைப்பு விடுத்தாலும், குருத்வாரா நிர்வாகிகள் உணவு வழங்குகின்றனர்.
இதுமட்டுமின்றி அரசுப் பள்ளிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் நபர்களுக்கும் உணவு வழங்கப்பட்டுவருகிறது. இந்த மகத்தான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஹர்விந்தர் சிங், ஈடிவி பாரத்திடம் பேசுகையில், “மக்களுக்கு சேவை செய்வதே எங்களின் முக்கிய நோக்கம். நோயான கரோனா பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
உணவு வழங்கும்போது வரிசையில் நிற்பவர்களுக்கு இடையே சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறது. பசியால் வாடும் அனைவருக்கும் எங்களின் சேவை உண்டு. இந்த நெருக்கடியான சூழலில் யாரும் உணவு இல்லாமல் வாடக்கூடாது என்பதே எங்கள் முக்கிய நோக்கம்” என்றார்.