திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான என்ஐஏ விசாரணையில், கேரள தகவல் தொழில் நுட்ப துறையில் அலுவலராக பணிபுரிந்த ஸ்வப்னா, அவரது நண்பர் சந்தீப் நாயர், சரீத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
இதையடுத்து, களத்தில் இறங்கிய அமலாக்க துறையினர், ஸ்வப்னாவுக்கு பல வங்கிகளில் கணக்கு மற்றும் லாக்கர் இருப்பதை கண்டறிந்தனர். அந்த லாக்கர்களில் கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அமலாக்க துறையின் அதிரடி விசாரணையில் ஸ்வப்னாவிற்கு கேரளாவில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக கூறப்படுகிறது. இதே வங்கியில், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் கணக்கும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆக்சிஸ் வங்கியின் கரமனா கிளையின் மேலாளர் ஷேஷாத்ரி ஐயர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரிடம் சமீபத்தில் அமலாக்க துறை நடத்திய விசாரணையில், ஸ்வப்னா சுரேஷ் வங்கி கணக்கு குறித்து தன்னை மிரட்டியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.