ராஜீவ் காந்தி அமைச்சரவையில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ஆரிப் முகமது கான் கேரளா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் இஸ்லாம் மதத்தில் இருக்கும் பிற்போக்குதனத்தை கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்தவர் ஆவார். முத்தலாக் முறையை நீக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த இவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜனதா தளத்திலும், பிறகு பகுஜன் சமாஜ் கட்சியிலும் இருந்தார். இறுதியாக, பாஜகவில் இணைந்த ஆரிப், தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக்கூறி கட்சியிலிருந்து விலகினார்.
இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாக பயன்படுத்தும் கட்சிகள், அவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதில்லை என குற்றம்சாட்டினார். கட்சியிலிருந்து விலகிய பிறகும் இவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், சேவை செய்ய எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பன்முகத்தன்மை கொண்ட இந்த நாட்டில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன். இறைவன் தேசத்தில் பணியாற்ற வாய்ப்பளிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். கேரள ஆளுநராக நியமிக்கப்பட்ட சதாசிவத்தின் பதவிக்காலம் முடிவடைவதால், இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.