நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சர்தார் பட்டேல் நினைவு கருத்தரங்கில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "பல்வேறு சூழ்நிலைகளில் பல சவால்களை எதிர்கொண்ட போதிலும் கடந்த 30 ஆண்டுகளாக இந்திய சீன நாடுகளுக்கு இடையே உறவு நன்றாகத்தான் இருந்தது.
எல்லைப் பகுதியில் அமைதி நிலவியதால் இரு நாடுகளுக்கு இடையே சுமுகமான உறவு இருந்து வந்தது. கரோனாவுக்கு பிறகான உலகத்தில் இந்திய சீன நாடுகளுக்கு இடையேயான உறவு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இரு நாடுகளுக்கிடையே இயல்பு நிலையை மீட்டெடுக்க போடப்பட்ட ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டும். எல்லைப் பகுதியைப் பொறுத்தவரை, பாதுகாப்பு படைகளின் நிலைகளை மாற்றிக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அனுமானங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களால் இருநாட்டு உறவு பாதிக்கப்படக்கூடாது. பரஸ்பர மதிப்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்வதன் மூலமாகவே அவரவர் நலனை பாதுகாத்துக் கொள்ள முடியும்" என்றார்.