தலைநகர் டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 8ஆம் தேதி நடக்கிறது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, ஆட்சியை தக்கவைக்கப் போராடிவருகிறது. மீண்டு(ம்) ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் காங்கிரஸூம் தனித்தனி வியூகங்கள் அமைத்து வருகின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் வேட்பாளராக இருக்கிறார். அவரை எதிர்த்து களம் காணும் முதலமைச்சர் வேட்பாளர் மற்ற இரு கட்சிகளிலும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் டெல்லியை பெண்ணின் குரல் ஒன்று கவர்ந்துள்ளது.
செல்போனில் கேட்கும் அந்தக் குரல், டெல்லியின் அடுத்த முதலமைச்சர் யார்? என்ற கேள்வியோடு வலம்வருகிறது. இந்தக் கருத்துக் கணிப்பை யார் நடத்துகிறார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் அந்தப் பெண்ணின் காந்தக் குரல், டெல்லியின் ’ஹாட் டாக்’ ஆக மாறிவிட்டது. அந்தப் பெண் டெல்லி வாக்காளர்களிடம் முக்கியமாக ஐந்து கேள்விகளை முன்வைக்கிறார். அவை, யாருக்கு ஆதரவு, முதலமைச்சர் வேட்பாளரில் யாரைப் பிடிக்கும், டெல்லியின் அடுத்த முதலமைச்சர் யார் என்பனவாகும்.
டெல்லி மக்களை கவரும் குரல் அழைப்பு +91 7447151652 என்ற எண்ணிலிருந்து வருகிறது. நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க போகிறீர்கள்? ஆம் ஆத்மி என்றால் எண் ஒன்றை அமுக்கவும். பாஜக என்றால் இரண்டையும், காங்கிரஸுக்கு மூன்றும் மற்றவைக்கு நான்கையும் அமுக்கவும் என அந்த உரையாடல் உள்ளது. இதேபோல் முதலமைச்சர் வேட்பாளர்களிலும், அரவிந்த் கெஜ்ரிவால் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடம் பாஜகவின் மனோஜ் திவாரிக்கும், மூன்றாம் இடம் காங்கிரஸின் அஜய் மக்கானுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ரகசிய கருத்துக் கணிப்பை நடத்தும் நபர்கள் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், இந்த தில்லுமுல்லு வேலையை செய்வதே மாநிலத்தின் முதலமைச்சர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் மூலம் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு 48 விழுக்காடு வாக்காளர்கள் ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க : ஐந்தே ஆண்டில் 20 ஆயிரம் வகுப்பறைகள் கட்டியுள்ளோம் - அரவிந்த் கெஜ்ரிவால்