ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகர் கோரும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சட்டமேலவையில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கு சட்ட மேலவையில் பெரும்பான்மை உள்ள காரணத்தால், இரு மசோதாக்களும் தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் பேச்சை கேட்டு சட்டமேலவை தலைவர் முகமது அகமது ஷெரிஃப் செயல்படுவதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சட்டமேலவையை கலைக்க அவர் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விவாதிக்க சட்டப்பேரவை ஜனவரி 27ஆம் தேதி கூடுகிறது. மேலும், சபாநாயகர் சீதாராமன் சட்டமேலவை கலைப்பது குறித்த விவாதத்தை அன்று முழுவதும் நடத்த ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னதாக, மசோதாவை நிறைவேற்றும் நோக்கில் 58 உறுப்பினர்கள் கொண்ட சட்டமேலவையில் வாக்கெடுப்பு நடத்த ஆளும் கட்சி கோரியது. ஆனால், இரு மசோதாக்களையும் தேர்வுக் குழுவக்கு அனுப்ப சட்டமேலவை தலைவர் உத்தரவிட்டார்.
1985ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த என்.டி. ராமா ராவ் சட்டமேலவையை கலைத்தார். ஜெகன் மோகன் தந்தை ராஜசேகர ரெட்டி 2007ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது மீண்டும் சட்டமேலவையை உருவாக்கினார்.
இதையும் படிங்க: கேரள செவிலியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!