புதிய வகை நோயால் பாதிக்கப்பட்ட மக்களை, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார்.
ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் எலுரு பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர், கடந்த சில நாள்களாக வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகளுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த மூன்று நாள்களில், இந்த புதிய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது.கோபரி தோட்டா, கொத்தபேட்டா, தூர்பூ வீதி, அருந்ததி பேட்டா ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
இச்சம்பவத்தினைத் தொடர்ந்து, அவர்கள் வசிக்கும் பகுதிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டு பரிசோதனை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய நோயைக் கண்டறியும் முயற்சியில் மருத்துவர்கள் களமிறங்கியுள்ளனர். மேலும், ஆந்திர சுகாதாரத் துறை அமைச்சர் அல்லா காளிகிருஷ்ணா ஸ்ரீனிவாஸ், சம்பவம் பற்றி அறிந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளைப் பார்வையிட்டார்.
இந்நிலையில் இன்று(டிச.07), ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, மருத்துவமனைக்குச் சென்று அனைத்து நோயாளிகளையும் பார்வையிட்டார். அவர்களின் அருகில் உட்கார்ந்து, உடல்நிலை குறித்து மருத்துவமனையில் சிகிச்சையளிப்பது குறித்தும் கேட்டறிந்தார். மக்களுடன் நாங்கள் நிச்சயம் துணைநிற்போம் என உறுதியளித்தார்.
முதலமைச்சரின் திடீர் வீசிட்டால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நோய்ப் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் மாநில அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது. ஏற்கெனவே, ஆந்திராவில் கரோனா ருத்ர தாண்டம் ஆடி வரும் நிலையில், புதிய நோய்ப் பரவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.