சென்னை: பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டி ஒரு தலைபட்சத்தோடு நடைபெற்றதாக மாணவிகள் வேதனையோடு தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பதிட்டா என்ற இடத்தில் பல்கலைக்கழகங்கள் இடையிலான கபடி போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
கடந்த 24 ஆம் தேதி காலை தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கும் இடையே காலிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த காலிறுதிப் போட்டியின் தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனைகளை தாக்குதல் நடத்தும் முயற்சியோடு தர்மங்கா பல்கலைக்கழக மாணவிகள் ஆக்ரோஷத்துடன் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்போது அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகள் மீது தர்பங்கா பல்கலைக்கழக மாணவிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்பொழுது இரு தரப்புக்கும் இடையே கடும் கைகலப்பு ஏற்பட்டதை அடுத்து போட்டியிலிருந்து தமிழ்நாடு வீராங்கனைகள் வெளியேறினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழ்நாடு அரசின் தலையீட்டால் மாணவிகள் பத்திரமாக சென்னை அழைத்து வரப்பட்டனர்.
ரயில் மூலம் இன்று காலை சென்னை வந்த மாணவிகள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாதிக்கப்பட்ட மாணவி ஜெயஸ்ரீ, "போட்டியை நடத்தும் குழுவினர் தொடர்ந்து ஒருதலைப் பட்சமாகவே நடந்து கொண்டனர். தங்களை எதிர்த்தரப்பு அணியினர் தாக்கும் போது யாரும் தடுக்கவில்லை" என வேதனை தெரிவித்தார்
அன்னை தெரசா பல்கலைக்கழக கபடி அணியின் பயிற்சியாளர் கலையரசி கூறுகையில், "ஒவ்வொரு முறையும் வடமாநில விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க செல்லும் போது, தமிழ்நாட்டிற்கு எதிராகவே போட்டியை நடத்தும் அமைப்புகள் செயல்படுவதாகவும், தமிழக வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவி வருவதாகவும் கவலை தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மிகுந்த அச்சத்துடனே தமிழகம் திரும்பி வந்திருப்பதாக மாணவிகள் வேதனையோடு தெரிவித்துள்ளனர்.