இதுகுறித்து அவர் கருத்தரங்கம் ஒன்றில் பேசுகையில், “ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ நீக்கப்பட்டது சிறப்பு வாய்ந்தது. முதலில் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த துணிச்சல் மிக்க நடவடிக்கைக்கு பாராட்டுகள்.
அறுதிப் பெரும்பான்மையுடன் முதலில் ஆட்சிக்கு வரும் போதே, இந்த நடவடிக்கையை எடுக்க முனைந்தோம். ஆனால் இரண்டாவது முறையாக 305 இடங்களில் வெற்றி பெற்றபோதுதான் இது சாத்தியமாகி உள்ளது. அதுவும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே இது சாத்தியமாகி உள்ளது.
ராகுல் காந்தி போன்றோா், சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ நீக்கத்தை அரசியல் விவகாரம் என்கின்றனர். அரசியல் என்ற ஒற்றை பாா்வையில் இருந்து அவர்கள் இன்னமும் வெளிவரவில்லை. ஆனால் நாங்கள் அவ்வாறு கருதவில்லை. ஜம்மு-காஷ்மீருக்காக, கடந்த 3 தலைமுறைகளாக பல உயிர்களை நாங்கள் தியாகம் செய்துள்ளோம். எங்களின் கண்கள் காஷ்மீரை தேசியத்தோடு காண்கிறது.
ஒருங்கிணைந்த தேசம் என்பதே பிரதமா் நரேந்திர மோடியின் கனவு. அந்த கனவு தற்போது நினைவாகி உள்ளது. முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் கனவும் இதுவே. ஐக்கிய நாடுகள் சபையிலும் வாஜ்பாய் இவ்வாறே வலியுறுத்தினாா். ஆனால் குடும்ப அரசியல்வாதிகள் அவ்வாறு இல்லை. இந்திய ராணுவம், பயங்கரவாதிகள் மீது ”துல்லிய தாக்குதல்” நடத்தியபோதும், ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். டெல்லியில் உள்ள ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) இந்தியாவிற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டபோதும் அவா்களுக்கு ஆதரவாக நின்றார்.
நான் மீண்டும் ஒன்றை நினைவுப்படுத்துகிறேன். வங்கதேசத்தில் அரசியல் பிரச்னை எழுந்தபோது, இந்திரா காந்தி வங்கதேசத்தினருக்கு ஆதரவாக நின்றார். இதனை முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பாராட்டினார். அதனை நான் மீண்டும் நினைவுப்படுத்துகிறேன். ஏனெனில் அது தேசியப் பிரச்னை.
ஆகவே ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை ராகுல் காந்தி போன்றோர், அரசியல் என்னும் கண்ணாடி அணிந்து காண்பதை தவிர்க்க வேண்டும். ராகுல் காந்தி போன்று, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் இந்த விவகாரத்தை அவ்வாறே காண்கிறார். இருவரும் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்கின்றனர். இது அரசியல் சாா்ந்த விஷயம் அல்ல. தேசிய பிரச்னை.
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் சர்தார் வல்லபாய் பட்டேல் கை வசம் வந்திருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நேருவின் கைகளுக்கு சென்றது. ஒருவேளை காஷ்மீர் விவகாரம் பட்டேல் கை வசம் சென்று இருந்தால் நிலைமை இவ்வாறு இருந்து இருக்காது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீா் பகுதிகளும் இந்தியாவோடு இணைந்து இருக்கும். சட்டப்பிாிவு 370 மற்றும் 35ஏ உள்ளிட்டவற்றிற்கு வேலை இருந்திருக்காது.
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஊடுருவல்காரா்கள் தொடர்ச்சியாக ஊடுருவ முயற்சிக்கின்றனா். கடந்த காலங்களில் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை, 3 குடும்பங்கள் (பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் காங்கிரஸ்) ஆட்சி செய்தது. அவர்கள் ஊழலில் திளைத்தவா்கள். தற்போது ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தோ்தல் வரும் போகும், ஆனால் தேசியமே பிரதானம்.!
நாட்டில் தேசியவாதத்துக்கும், குடும்ப அரசியலுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதில் வாக்காளர்களாகிய நீங்கள், தேசியத்தின் பக்கம் நிற்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: காந்தியின் 150ஆவது பிறந்ததினம்: அமித் ஷா தலைமையில் ஆலோசனை!