நாட்டில் உள்ள நகரங்களுக்கு தூய்மையின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், வடக்கு சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூருக்கு ஐந்து நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியதோடு, அதனை குப்பை இல்லா நகரமாக அறிவித்துள்ளது.
அம்பிகாபூர் நகராட்சியில் 'ஸ்வச்சதா திதி' என்று அழைக்கப்படும் பெண் தூய்மைப் பணியாளர்கள் 450 பேர் நகரத்தை தூய்மையாகவும், கரோனா போன்ற வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றவும் அயராது கடுமையாக உழைத்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய தூய்மைப் பணியாளர், "நம் நாட்டை நோயிலிருந்து பாதுக்காக்கப்படுவதை உறுதிசெய்ய தாங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறோம், தங்களது முயற்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அம்பிகாபூருக்கு ஐந்து நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" எனக் கூறினார்.
ஸ்வச்சதா திதி என்றழைக்கப்படும் தூய்மைப் பணியாளர்களை மேற்பார்வையிடும் சஷிகலா பகத் கூறியதாவது, “அனைத்து பாராட்டுகளும் களத்தில் பணிபுரியும் பெண்களுக்குத்தான். இதுபோன்ற அங்கீகாரம் அவர்களுக்கு மன உறுதியை அளிப்பத்தோடு, அவர்களை கடினமாக உழைக்க தூண்டும். நாடு கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டபோது அவர்கள் சற்று மணச்சேர்வு அடைந்திருந்தார்கள், ஆனாலும் தங்கள் நகரத்தை சுத்தமாகவும், நோய் இல்லா நகரமாகவும் மாற்ற கடினமாக உழைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர் ”
கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அம்பிகாபூர் நகராட்சி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு அவர்கள் அனைவருக்கும் நகராட்சியால் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, பெண் தூய்மைப் பணியாளர்கள் ஒரு வருடத்தில் 18 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகளை அம்பிகாப்பூரிலிருந்து சேகரிக்கின்றனர். தூய்மைக்கான முயற்சிகளுக்காக அம்பிகாபூர் அங்கீகரிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 2018-19ஆம் ஆண்டிற்கும் இதேபோன்ற ஐந்து நட்சத்திர மதிப்பீட்டை நகரம் பெற்றுள்ளது.
அம்பிகாபூர் தவிர, ராஜ்கோட், சூரத், மைசூர், இந்தூர், நவி மும்பை ஆகிய ஐந்து நகரங்களுக்கும், ஐந்து நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளன, இதுதவிர 65 நகரங்களுக்கு மூன்று நட்சத்திர மதிப்பீடும், 70 நகரங்களுக்கு ஒரு நட்சத்திர மதிப்பீடும் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஒரு லட்சம் கோடி வேண்டும் - மத்திய அரசுக்கு மம்தா வலியுறுத்தல்