சீனாவின் வூஹான் நகரத்தில் தோன்றி உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. நூற்றுக்கணக்கானவர்கள், நாள்தோறும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவிலிருந்து தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இதையடுத்து, அந்நாட்டின் விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தற்காலிகமாக தடைவிதித்துள்ளன. அந்நாட்டின், பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், வூஹான் பகுதியைக் கொண்டுள்ள ஹூபே மாகாணத்தில் மட்டும் கொரோனா பலி எண்ணிக்கை தற்போது இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளது.
இந்தக் கொரோனா வைரஸ் பரவும் அச்சம் இந்தியாவுக்குள்ளும் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஏர் இந்தியா சீனாவுக்குச் செல்லும் தனது விமானங்களை தற்காலிகமாக நிறுத்துகிறது.
கடந்த மாதம் டெல்லி-ஷாங்காய் தடத்தில் இயங்கும் விமானத்தை ரத்துசெய்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 14ஆம் தேதி வரை சீனாவின் ஷாங்காய் நகருக்கு ஏர் இந்தியா விமான சேவையை நிறுத்தியது. தற்போது இந்ததச் சேவை நிறுத்தம் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அமல்படுத்தப்படுமா? - காங். தலைவர் பதில்