கரோனா நெருக்கடி காலகட்டத்திலும் வேளாண் பொருள்களின் ஏற்றுமதி உயர்ந்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஏற்றுமதியின் மொத்த மதிப்பு 53, 626.6 கோடி. அதாவது, 2019ஆம் ஆண்டின் இதே காலத்தின் ஏற்றுமதி மதிப்பை விட இப்போது 43.4 விழுக்காடு கூடுதலான மதிப்பில் ஏற்றுமதி நடந்துள்ளது.
2019ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஏற்றுமதி மதிப்பு ரூ. 37.397.3 கோடியாக இருந்தது. கடந்தாண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு ஏப்ரல்- செப்டம்பர் வரையிலான ஏற்றுமதியில் நிலக்கடலை(35 விழுக்காடு), சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை(104 விழுக்காடு), கோதுமை(206 விழுக்காடு), பாஸ்மதி அரிசி(13 விழுக்காடு) உள்ளிட்டவைகளின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஏற்றுமதியின் மதிப்பு, ரூ. 9,002 கோடியாக இருந்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில் ஏற்றுமதியின் மதிப்பு ரூ. 2,113 கோடியாக இருந்தது. செப்டம்பரில் ஏற்றுமதியின் விழுக்காடு 81.7 விழுக்காடு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், வேளாண் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக, வேளாண் ஏற்றுமதி கொள்கையை 2018ஆம் ஆண்டில் அரசாங்கம் அறிவித்தது. இது பழங்கள், காய்கறிகள், மசாலாப் பொருள்கள் போன்ற பணப்பயிர்களை ஏற்றுமதி மையமாகக் கொண்டு விவசாயம் செய்வதற்கும் அடிப்படையிலான அணுகுமுறையை வழங்குகிறது.
இந்த ஏற்றுமதியை உலகளாவிய சந்தையில் கணிசமாக அதிகரிப்பதற்காக, பல்வேறு தலையீடுகள் மூலம், மொத்த உற்பத்தி, விநியோகச் சங்கிலி முழுவதிலும் உள்ள பங்குதாரர்களை அடையாளம் காணவும், ஆவணப்படுத்தவும், பங்குதாரர்களை அணுகவும் ஈபிஎஃப் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இது தவிர, வேளாண் வணிகச் சூழலை மேம்படுத்துவதற்காக வேளாண்-இன்ப்ரா நிதியை ரூ .1 லட்சம் கோடி என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும், வேளாண் அமைச்சகம் வேளாண் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு விரிவான செயல் திட்டத்தையும் தயார் செய்துள்ளது. அதாவது வேளாண் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக மதிப்பு கூட்டல் மற்றும் இறக்குமதி மாற்றீட்டிற்கான விரிவான செயல் திட்டம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது குறிப்பிடத்தக்கது.