உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் நேற்று (ஆகஸ்ட் 19) 34 பயணிகளுடன் சென்ற பேருந்து அடையாளம் தெரியாத நிதி நிறுவன முகவர்களால் கடத்திச் செல்லப்பட்டது. பின்பு, அப்பேருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் எடவா மாவட்டத்தில் மீட்கப்பட்டது. பின், பயணிகள் அனைவரும் அம்மாநில காவல் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் ஆக்ரா பேருந்து கடத்தலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிக்கும் காவல் துறைக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில், குற்றவாளி காயங்களுடன் பிடிபட்டார்.
முன்னதாக ஃபெரோஷாபாத் சாலையில், ஃபதேஹாபாத் காவல் துறையினர்(ஹரியானா) வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆக்ரா பேருந்து கடத்தலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி பிரதீப் குப்தா ஒரு வாகனத்தில் தப்பிச் செல்ல முயலவே, அவரைப் பிடிக்க காவல் துறையினர் முயன்றுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பிரதீப் குப்தா, வேறு வழியின்றி தப்பிச்செல்ல முடியாமல், காவல் துறையினர் கையில் சிக்கினார். இதையடுத்து காயங்களுடன் பிடிபட்ட பிரதீப் குப்தாவை, அந்த மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழும்போது பிரதீப் குப்தாவின் உதவியாளர் தப்பினார். இதுதொடர்பாக ஃபதேஹாபாத் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.