இன்று நாடு முழுவதும் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இன்று பேசிய அரசுத் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பது தனக்கு கவலை அளிப்பதாகக் கூறினார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வழக்கைத் தாக்கல்செய்யும் ஒரு சாதாரண மனிதன் பல்வேறு போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக நாடு முழுவதும் சுமார் 4.29 லட்ச வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது ஒருவர் தனது 50 அல்லது 60 வயதில் வழக்கைத் தாக்கல்செய்தால், அவரது வாழ்நாளில் தீர்ப்பைப் பெற முடியாது. ஒருவர் தொடுக்கும் வழக்குகளின் முடிவை காண முடியாது என்ற நிலையில் இந்தியாவின் நீதித் துறை இருக்கக் கூடாது.
பணக்காரர்களும் கார்ப்பரேட்டுகளும் இந்தத் தாமதத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் 30 ஆண்டுகள் பொறுமையாக காத்திருக்கலாம். ஆனால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஏழைகள், 30 ஆண்டுகள் காத்திருக்க முடியாது. அவர்கள் கையில் இருக்கும் பணமும் பொறுமையும் தீர்ந்துவிடும்.
சட்ட ஆணைய அறிக்கையின்படி இந்தியா நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்க்க 10 லட்சம் வழக்குகளுக்கு குறைந்தது 50 நீதிபதிகள் தேவை. தற்போது நம்மிடம் 20 ஆயிரத்து 588 நீதிபதிகளே உள்ளனர். ஆனால் நமக்கு 1.36 லட்சம் நீதிபதிகள் வேண்டும். இதன் காரணமாக நமது நீதிபதிகள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது" என்றார்.
மேலும், கரோனாவுக்குப் பின் நிலுவை வழக்குகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மும்பை மக்கள் ஒற்றுமை, சகோதரத்துவத்துடன் இருந்திட வேண்டும்' - ரத்தன் டாடா