கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. சர்வதேச அளவில் பெரும்பாலான விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பிற நாடுகளில் பல மாணவர்கள் சிக்கித் தவித்துவருகின்றனர். அவர்களை இந்தியா அழைத்துவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.
அதன்படி கோவிட்-19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த சுமார் 300 இந்திய மாணவர்கள் கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் ஒரு மாத கால தனிமைப்படுத்துதலுக்குப் பின் முதல்கட்டமாக 52 மாணவர்கள் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இது குறித்து காஷ்மீரிலுள்ள உயர் அலுவலர் கூறுகையில், "இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் முதல்கட்டமாக 52 மாணவர்கள் நேற்றிரவு 7 மணிக்கு இந்தியா அழைத்துவரப்பட்டனர். கண்காணிப்பு காலத்தை நிறைவு செய்யும் மாணவர்கள் வரும் காலங்களில் தொடர்ந்து அழைத்துவரப்படுவாரகள்.
இவர்கள் ஹஜ் விடுதிக்கு(மாநில அரசின் தனிமைப்படுத்தல் முகாம்) அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து மாணவர்களின் வீடுகளில் விடப்படுவார்கள்" என்றார்.
இதையும் படிங்க: ஊதியம் வேண்டாம் தானியம் கொடுங்கள்’