புதுச்சேரி உப்பளம் தொகுதி முழுவதும் விநியோகம் செய்யப்படும் குடிநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரிடையாக பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீரைப் பருகும் மக்கள் வாந்தி, பேதி, காய்ச்சல், சீறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் எனக் கூறி புதுச்சேரி மாநில அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் உப்பளம் தொகுதி மக்கள் பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பொதுப்பணித்துறை அலுவலகம் வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் பின்னர் அலுவலகத்தில் கதவை மூடிவிட்டு அலுவலகம் முன்பு சாலையில் அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அன்பழகன், சுத்தமான குடிநீர் வழங்கல் வேண்டும் என்றும் தனது உப்பளம் தொகுதியில் உள்ள உப்பனாறு கழிவு நீர் கால்வாய்க்காலை போர்க்கால அடிப்படையில் தூர்வாருவதுடன், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து கொசு உற்பத்தியை தடுக்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க...திருமணத்தை மீறிய உறவால் இளைஞர் வெட்டிக் கொலை: பெண் கைது