கர்நாடக மாநிலத்தில், உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள யெல்லபுரா வட்டத்தின் சஹஸ்ராலி கிராமத்தில் வசிப்பவர், சந்திரசேகர பட் மற்றும் அவரது மனைவி பிரியங்கா பட்.
இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி, அடையாளம் தெரியாத ஒருவர் தங்கள் ஒரு மாத பெண் குழந்தையைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டதாகவும், தங்கள் குழந்தை இறந்துவிட்டதாகவும் கூறி, யெல்லபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, காவல் துறையினர் கிணற்றில் இருந்து குழந்தையின் சடலத்தை மீட்டனர். பின்னர் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையின் பெற்றோர்கள் மீது சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் குழந்தையின் பெற்றோர்கள், தாங்கள் தான் பிறந்தது பெண் குழந்தையாக உள்ளதால் கிணற்றில் தூக்கி எறிந்ததாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து யெல்லபுரா காவல் துறையினர், அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.