உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவிலிருந்து 63 கிமீ தொலைவில் உள்ளது உன்னாவ் மாவட்டம். பல்வேறு காரணங்களுக்காக பல மாநிலங்கள் பிரபலமடைந்துவரும் நிலையில், இந்த மாவட்டமோ பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பிரபலமடைந்துள்ளது. ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 86 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அந்த மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
இதே காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக 185 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. 2017ஆம் ஆண்டு உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாஜகவைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில், டிசம்பர் 10ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மற்றொரு பெண்ணை குற்றவாளிகள் உயிரோடு எரித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அசோஹா, அஜ்கெயின், மகி, பங்காருமாவு உள்ளிட்ட பல இடங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. பெரும்பாலான வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பிணையில் வெளியே உள்ளனர் அல்லது தலைமறைவாக இருக்கிறார்கள்.
மாவட்டத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு காவல் துறையினர்தான் காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். உத்தரப் பிரதேச சட்டப்பேரவை சபாநாயகர் ஹிரிதே நாராயண் திக்சீத், சட்டத்துறை அமைச்சர் பிரிஜேஷ் பாதக், மக்களவை உறுப்பினர் சாக்சி மகாராஜ் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இது குறித்து வழக்கறிஞர் ஒருவர், "அரசியல்வாதிகள் குற்றத்தை செய்யத் தூண்டுகின்றனர். அரசியல் ரீதியாக பயனடைய அரசியல்வாதிகள் குற்றத்தை பயன்படுத்துகின்றனர். அவர்களின் கைப்பாவையாக காவல் துறையினர் உள்ளனர். நில அபகரிப்பு பிரச்னையை முன்வைத்து விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டபோதுகூட காவல் துறையினர் சரியான நடவடிக்கையை எடுக்கவில்லை" என்றார்.
இதற்கு, குல்தீப் சிங் வழக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக உள்ளது. வழக்குப்பதிவு செய்து ஒன்பது மாதங்கள் ஆன நிலையில் ஒரு நடவடிக்கை கூட எடுக்காத நிலையில், முதலமைச்சர் வீட்டின் வெளியே வந்து பாதிக்கப்பட்ட பெண் போராட்டத்தில் ஈடுபடும்போதுதான் ஊடக வெளிச்சம் கிடைக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் துறையால் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுபோன்ற சட்டவிரோத செயல்களைத் தடுக்க பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும், நீதிமன்றங்கள் குடிமக்களின் உரிமைகளைக் காக்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: 'முதலமைச்சர் தொகுதி மிகவும் அபாயகரமானது' - மக்களை அச்சுறுத்திய பதாகை