கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் பெரம்பாவூர் பகுதியில் பிஜு (46)- அம்பிலி (39) தம்பதியினர் தங்களது பதின்பருவ குழந்தைகளோடு வசித்து வந்தனர். இன்று (டிசம்பர் 31) காலை வெகுநேரமாகியும் பிஜு குடும்பத்தினர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் ஹாலில் குழந்தைகளும், படுக்கையறையில் தம்பதியினரும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். அவர்களது உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணைக்கு பின்னர், கடன் பிரச்னையால் தற்கொலை செய்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனிடையே, பிஜு வீட்டில் நடத்திய சோதனையில் கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், ’உறவினர்களை வீட்டிற்குள் விட்டால் எங்கள் ஆத்மா சாந்தியடையாது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பணம் கொடுக்க வேண்டியவர்களின் பட்டியலும் வீட்டிலிருந்த டைரியிலிருந்து காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது.
நிதி நெருக்கடி
பிஜு ஒரு சீட்டுக் கம்பெனி நடத்தினார். இதில் அவருக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. நிர்கதியாகத் தவித்த இக்குடும்பத்தினருக்கு யாரும் உதவவில்லை என்று கூறப்படுகிறது.
பணம் கொடுக்க வேண்டிய சிலருக்கு இன்று காலை (டிச.31) பணத்தைத் திருப்பித் தருவதாகத் தெரிவித்திருந்த நிலையில், இந்த மோசமான முடிவை பிஜு குடும்பத்தினர் எடுத்தனர். தற்கொலையா? தற்கொலைக்கு தூண்டப்பட்டார்களா என்பது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:செயலி மூலம் கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தும் கும்பல்!