பிரிட்டனிலிருந்து நாடு திரும்பிய ஆறு பேருக்கு உருமாறிய கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் புதிய வகை கரோனா தொற்று அதி தீவிரமாகப் பரவிவருகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்திலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
மேலும், கடந்த ஒரு மாத காலத்தில் இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய பயணிகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது.
அந்தவகையில், கடந்த நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய 33 ஆயிரம் பேருக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில், 114 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேருக்கு உருமாறிய கரோனா தொற்று இருக்கிறது என்பதைக் கண்டறிய, அவர்களின் மாதிரிகள் சோதனைக்குள்படுத்தப்பட்டன. இதில், பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸில் 3 நபர்களுக்கும், ஹைதராபாத்தின் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையத்தில் 2 நபர்களுக்கும், புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்தில் ஒருவருக்கும் உருமாறிய கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், உருமாறிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19 நிலவரம் : உலக அளவில் 8.11 கோடியைத் தாண்டிய பாதிப்பு