உத்தரபிரதேச மாநிலம் அவத் பகுதியிலிருந்து டபுள் டக்கர் பேருந்து ஒன்று டெல்லிக்கு புறப்பட்டது. அப்போது, ஆக்ரா அருகே உள்ள 'யமுனா எக்ஸ்பிரஸ்வே' நெடுஞ்சாலையின் பாலத்தில் நிலை தடுமாறிய பேருந்து, ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் சுமார் 29 பேர் பலியாகினர்.
பேருந்தில் மொத்தம் 50 பேர் பயணித்துள்ளனர், மேலும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் காவல்துறையினரும், மீட்புப்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரித்துள்ள அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத், உடனடி மீட்பு, மருத்துவப் பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் உதவித்தொகை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்து அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்றதாகவும், பேருந்து ஓட்டுநர் குடி போதையில் இருந்ததாக சந்தேகிப்பதாகவும் ஆக்ரா மாவட்ட ஆட்சியர் ரவி குமார் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.