ஆந்திர மாநிலம் புட்டலபட்டு அருகே பண்டபள்ளி என்ற இடத்தில் உள்ள தனியார் நிறுவன பால் பண்ணையிலிருந்து நேற்று (ஆக. 20) அம்மோனியம் வாயு கசிந்தது.
இதில், 14 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் திருப்பதியில் உள்ள எஸ்.வி.ஐ.எம்.எஸ். அல்லது ருயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, சித்தூர் மாவட்ட ஆட்சியர் நாராயண் பாரத் குப்தா கூறுகையில், "இந்த விபத்து மாலை 5 மணியளவில் (ஆக. 20) நிகழ்ந்ததாகத் தகவல் கிடைக்கப்பெற்றது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 14 பேர் சித்தூர் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது.
கவலைக்கிடமாக உள்ள மூவர் திருப்பதியில் உள்ள எஸ்.வி.ஐ.எம்.எஸ். அல்லது ருயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் பெண்கள். இந்த விபத்து நிர்வாகத்தின் அலட்சியத்தால் நிகழ்ந்ததா அல்லது தொழிலாளர்களின் கவனக்குறைவால் ஏற்பட்டதா என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.
தொழில்கள் துறை பொது மேலாளர், தீயணைப்புத் துறையினர் இந்த விபத்து குறித்து வெள்ளிக்கிழமை (இன்று) ஆய்வுசெய்கின்றனர்" என்றார்.
அம்மாநில அமைச்சர் பெட்டிரெட்டி ராமச்சந்திரா, இந்த விபத்து குறித்து உரிய முறையில் விசாரிக்க சித்தூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 'வாயுக்கசிவு விபத்து ஆந்திராவில் வழக்கமான ஒன்றாகிவிட்டது'