ஹைதராபாத்: நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகம் செய்துவரும் கும்பல்களை ஹைதராபாத் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தடுத்துவருகிறது. கோவாவில் இருந்து தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா மாநிலங்களுக்கு போதைப்பொருள்களை விநியோகம் செய்துவந்த பிரிதிஷ் போர்கர், டிசோசா, எட்வின் நூன்ஸ் ஆகியோர் இந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கோவா கும்பலிடம் இருந்து தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள 6,000 பேர் போதைப்பொருள் வாங்கி தங்களது பகுதியில் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இவர்களது செல்போன் எண்களை கண்டறிந்து, 41A CrPC பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுவருகிறது.
இவர்களால் போதைக்கு அடிமையான 150 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தென்னிந்தியாவில் போதைப்பொருள் விற்பனைக்கு உதவி செய்துவந்த தமிழ்நாடு கடத்தல் மன்னன் பாலமுருகன் கோவாவில் நவம்பர் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இப்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கோவாவில் ஹோட்டல் நடத்தி வரும் இவருக்கு, 15 ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் மன்னன் எட்வின் நூன்ஸ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கோவாவிலிருந்து கஞ்சா மற்றும் ஹாஷ் ஆயில் போதைப்பொருள்களை வாங்கி ஏஜென்டுகள் மூலம் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை இவர் செய்துவந்துள்ளார். இதனிடையே தமிழ்நாடு காவல்துறையால் பலமுறை கைது செய்யப்பட்டும் சிறைக்கும் சென்றும் வந்துள்ளார். நாளடைவில் கோகைன், ஹெராயின், எம்டிஎம்ஏ போதைப்பொருள்களையும் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார். இவரிடமிருந்து பல திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் போதைப்பொருள் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலமுருகனிடம் விசாரிக்க போலீசார் தரப்பில் நீதிமன்ற காவல் கோரப்பட்டுள்ளது.
கோவாவுக்கு வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களிடம் நைஜீரிய கும்பல்கள் போதைப்பொருளை விற்பனை செய்துவந்துள்ளது. பெரும்பாலும் ஹோட்டல்கள், பப்கள், கிளப்புகளில் மக்கள் கூட்டம் கூடுவதால், நைஜீரிய கும்பல்கள் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏஜெண்டுகளாக மாற்றிவிட்டனர். இந்த ஹோட்டல் உரிமையாளர்களுக்கு நாடு முழுவதும் பழக்கம் உள்ளதால், தேசிய அளவில் போதைப்பொருள்கள் சப்ளை நடக்கிறது. இவர்களை கண்டறிந்து கைது செய்து வருகிறோம். குறிப்பாக சில மாநிலங்களில் போதைப்பொருள் கும்பல்களுக்கு காவல்துறை மற்றும் அரசியல் ஆதரவும் இருக்கிறது என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆடையில்லாமல் பெண்கள் அழகு... பாபா ராம்தேவ் மன்னிப்பு கோர வேண்டும்... மகளிர் ஆணையங்கள்...