டெல்லி: இந்தியா- சீனா எல்லை பிரச்னை தொடர்பாக ராகுல் காந்தியின் அறிக்கைக்கு மத்திய அமைச்சர்கள் கடுமையான பதிலை அளித்துவருகின்றனர். இவ்விவகாரத்தில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு உள்துறை இணையமைச்சர் ஜி கிஷன் ரெட்டி அளித்த பதிலில், “இந்திய நிலப்பரப்பை சீனாவிடம் இழந்தது யார் என்பது குறித்து உங்கள் தாத்தாவிடம் கேட்டிருந்தால், விடை கிடைத்திருக்கும். யாரிடம் தேசப்பக்தி உள்ளது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் குற்றஞ்சாட்டுக்கு மத்திய அமைச்சர் ஆர்கே சிங், “இந்தியா மீது தாக்குதல் நடத்தியோருக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு தெரியும். இது பற்றி அடிப்படை புரிதல் கூட இல்லாதவர் ராகுல் காந்தி. அவருடைய அறிக்கை அச்சில் ஏற்றமுடியாதது. முதிர்ச்சியற்றது” என்று பதிலளித்தார்.
முன்னதாக ராகுல் காந்தி வெளியிட்டிருந்த அறிக்கையில், “இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது” எனத் தெரிவித்திருந்தார். கிழக்கு லடாக்கில் சீனாவுடன் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. தற்போது 9 சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு நாட்டு வீரர்களும் படைகளை விலக்கிவருகின்றனர். இது புதன்கிழமை (பிப்.10) முதல் தொடர்கிறது.
இதையும் படிங்க: இந்திய நிலப்பரப்பை பிரதமர் சீனாவிற்கு அளித்துவிட்டார் - ராகுல் குற்றச்சாட்டு