பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் அருகே சட்நாக் பகுதியில் உள்ள 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆனந்த் கனன் பிர்லா ஹவுசில், 21 மான்கள் வளர்க்கப்பட்டு வந்தன. அதில் 20 புள்ளி மான்கள் மற்றும் ஒரு சிங்காரா மான் எனத் தெரிகிறது.
வனத்துறையினரிடம் முறையாக உரிமம் பெறப்பட்டு, சுமார் 30 ஆண்டுகளாக இந்த மான்கள் வளர்க்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. யுனிவர்சல் கேபிள் என்ற தனியார் நிறுவனம் இந்த மான்களை பராமரித்து வந்தது. 14 ஊழியர்கள் ஷிஃப்ட் அடிப்படையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இப்பகுதிக்கு அருகே கங்கை ஆறு ஓடுவதால், அங்கு தெருநாய்கள் அதிகளவு சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி இரவு நேரத்தில் தெருநாய்கள் கூட்டம், வேலியைத் தாண்டி பிர்லா ஹவுசில் நுழைந்துள்ளது. அப்போது பாதுகாவலர்கள், பராமரிப்பு ஊழியர்கள் யாரும் பணியில் இல்லை எனத் தெரிகிறது. இதையடுத்து நாய்கள் அங்கிருந்த மான்களை கடித்துக் குதறியுள்ளன. இதில் 21 மான்களும் உயிரிழந்துவிட்டன.
காலையில் இந்தச் சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர், மான்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வு செய்து, பின்னர் அந்த வளாகத்திலேயே அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக பிர்லா ஹவுஸ் மேலாளர், மான்கள் பராமரிப்பில் இருந்த ஊழியர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கங்கையில் சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து - மீட்பு பணி தீவிரம்...