டெல்லி: அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து, நேற்று(மார்ச்.4) அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இதில், அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர் ஆர்யா வோஹ்ரா(21) பயணம் செய்துள்ளார்.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருந்த மாணவர் ஆர்யா, அருகில் இருந்த அமெரிக்க பயணி மீது சிறுநீர் கழித்ததாக தெரிகிறது. விமான பணியாளர்கள் பலமுறை கூறியும் இருக்கையில் அமராமல் தகராறு செய்த அந்த மாணவர் சக பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்ததாக தெரிகிறது.
இந்திய மாணவர் குடிபோதையில் தகராறு செய்வதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானி, டெல்லியில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அங்கு பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் மாணவரை அழைத்துச் சென்று, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிஐஎஸ்எஃப் வீரர்களிடமும் மாணவர் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இந்திய மாணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிலைய போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இந்திய மாணவர் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார். மிகுந்த போதையில் இருந்த அந்த மாணவர், விமான பணியாளர்களின் அறிவுரைகளை கடைபிடிக்கவில்லை. இருக்கையில் அமர மறுத்து, பலமுறை விமான பணியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
விமான பயணிகளுக்கும் விமானத்திற்கும் ஆபத்து ஏற்படும் வகையில் நடந்து கொண்டார். இறுதியில் சக அமெரிக்க பயணி மீது சிறுநீர் கழித்தார். பின்னர் இரவு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்திய மாணவர் சக விமான பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கினார். அதனால், அந்த மாணவர் இனி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம் கோரியுள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து, டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் சங்கர் மிஸ்ரா என்ற இந்திய பயணி, குடிபோதையில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்மணி கொடுத்த புகாரின் பேரில், சங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக சங்கர் மிஸ்ராவை அவர் பணிபுரிந்து வந்த அமெரிக்க நிதி நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இருக்கையில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் ஃபைன்