ஆந்திரா: ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள முனகபாக்கத்தைச் சேர்ந்த வில்லூரி நூக்கா நரசிங்க ராவ் என்பவர், தனது மகனின் திருமணத்திற்கு வித்தியாசமான முறையில் அழைப்பிதழை வடிவமைத்துள்ளார்.
திருமண அழைப்பிதழ் உற்றார் உறவினர்களை கவரும் வகையிலும், புதுவிதமாக இருக்க வேண்டும் என அனைவரும் நினைப்பார்கள். ஆனால் தனது மகனின் திருமண அழைப்பிதழ் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என நரசிங்க ராவ் நினைத்துள்ளார். அதனால், நோட்டுப்புத்தகம் போல அழைப்பிதழை வடிவமைத்துள்ளார்.
80 பக்கங்கள் கொண்ட ஒரு நோட்டுப்புத்தகத்தில், முன்பக்க அட்டையில் திருமணம் நடைபெறுவது தொடர்பான விபரங்களும், பின்புற அட்டையில் மணமக்கள் புகைப்படம் இடம்பெறும் வகையில் வடிவமைத்துள்ளார்.
ஒரு அழைப்பிதழின் விலை 40 ரூபாய் எனவும், 700-க்கும் மேற்பட்ட அழைப்பிதழ்களை அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்ததாகவும் நரசிங்க ராவ் தெரிவித்தார். அழைப்பிதழ் நோட்டுப் புத்தகம் போல இருப்பதால், அதை திறக்கும்போதெல்லாம் மணமக்களையும் நினைவில் கொள்வார்கள் என்றும், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு யாரோ ஒருவர் இதுபோல வித்தியாசமான முறையில் அழைப்பிதழ் கொடுத்ததாகவும், அதனை பத்திரமாக வைத்திருந்து தற்போது அதேபோல் அழைப்பிதழ் அச்சடித்ததாகவும் நரசிங்க ராவ் தெரிவித்தார். இவரது இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.